பிரதமரின் ஃபெல்லோஷிப் திட்டத்தின்கீழ் பிஎச்டி படிக்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக பிரதமரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
சிறந்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் சிறந்த ஆய்வு மாணவர்களை ஈர்க்கவும் இந்த அளவுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஓர் அங்கமான அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி போர்டு (எஸ்இஆர்பி), இந்திய தொழில் கூட்டமைப்புடன் (சிஐஐ) இணைந்து இந்த ஃபெல்லோஷிப் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். இதில் 50 சதவீதப் பணத்தை அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி போர்டு வழங்கும். மீதமுள்ள 50 சதவீதப் பணத்தை இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஸ்பான்சர் செய்யும் தொழில் நிறுவனம் வழங்கும்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க, கடந்த 14 மாதங்களில் பதிவு செய்திருக்க வேண்டும். மாணவர்கள் தங்களது ஆய்வுத் திட்டம் எது என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். அந்தத் திட்டம் நடைமுறைப் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் மாணவர்கள் அனுப்பும் திட்டம் குறித்து தொழிற்துறையினருடன் கலந்து பேசி, அத்திட்டத்துக்கு தொழிற்துறையினர் ஸ்பான்ஸர் செய்ய விரும்புகிறார்களா என்பது கேட்டறியப்படும். தொழிற் துறையினர் ஸ்பான்சர் செய்ய ஆர்வம் காட்டினால் அந்த மாணவருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பிப்பதற்கு முன்னதாக தகுந்த தொழில் நிறுவனங்களில் ஸ்பான்சர் பெறுவதற்கும் முயற்சிக்கலாம்.
பொறியியல் ஆராய்ச்சி போர்டு (எஸ்இஆர்பி), இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்படும் குழு, இந்த ஃபெல்லோஷிப் பெறத் தகுதியுடைய மாணவர்களை வெளிப்படையாகத் தேர்வு செய்யும். அத்துடன் அவர்களது ஆராய்ச்சித் திட்டங்களையும் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதிருக்கும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் செயும் ஆராய்ச்சிப் பணிகள் திருப்திகரமாக இருந்தால் இந்தக் கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
ஆராய்ச்சி செய்வதற்காக பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் பதிவு செய்துள்ள தகுதியுடைய மாணவர்கள் இந்த ஃபெல்லோஷிப் பெற ஆன்லைன் மூலம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: www.primeministerfellowshipscheme.com