3 August 2014

மகத்தான கணித மேதை

ஈரோட்டில் ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார் ராமானுஜன். அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே அவருக்குக் கணிதத்தில் அபாரமான திறமை இருப்பது தெரியவந்தது.
அவர் பள்ளி மாணவராக இருக்கும் போதே கல்லூரி மாணவர்களின் கணித நூல்களைப் படிக்க முயன்றார்.அப்படி அவருக்குக் கிடைத்த புத்தகங்களில் ஒன்றுதான் கணித அறிஞர் லோனியின் முக்கோணவியல்.
ராமானுஜன் முக்கோணவியலின் நடைமுறைகளை வெறும் விகிதங்களாகப் புரிந்துகொள்ளாமல் முடிவிலி வரிசையைக் கொண்ட கருத்துகளாகப் புரிந்து கொண்டார்.
பள்ளிப்படிப்பில் அருமையான மதிப் பெண்களோடு தேறியவர், 1904-ல் கல்லூரியில் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதும் பரீட்சையில் தோல்வியடைந்தார்.
பச்சையப்பன் கல்லூரியில் 1909-ல் மீண்டும் சேர்ந்தார். மூன்று மணி நேரக் கணக்குப் பரீட்சையை அரைமணி நேரத்தில் எழுத முடிந்த ராமானுஜனால் மற்றப் படிப்புகளில் தேற முடியவில்லை. அவர் மீண்டும் தோல்வி அடைந்தார்.
இந்தியக் கணக்கியல் சங்கத்தின் நிறுவனத் தலைவரான வி. ராமஸ்வாமியைச் சந்தித்து மாதாந்தர செலவுகளைச் சமாளிக்கத் தனக்கு ஒரு குமாஸ்தா வேலையை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர் அறிமுகக் கடிதம் தந்து பிரஸிடென்சி கல்லூரியின் எஸ்.வி. சேஷு அய்யரிடம் அனுப்பி வைத்தார். அவர் நெல்லூர் மாவட்டக் கலெக்டரான ஆர். ராமச்சந்திரராவிடம் அனுப்பி வைத்தார்.
ராமானுஜனின் கணக்குக் குறிப்புப் புத்தகத்தை ஆராய்ந்த அவர், பல கணக்கியல் உண்மைகள் அதில் கொட்டிக் கிடப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.
ராமானுஜன் 17 வயதாகும்போது பெர்நௌலி எண்கள் மற்றும் யூலர் மஸ்சிரோனி கான்ஸ்டன்ட் ஆகியவற்றில் ஆராய்ச்சியைத் தொடங்கினார். சென்னைத் துறைமுகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்துகொண்டே கணித ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.
1912-1913 ஆண்டுகளில் தன்னுடைய கணக்குத் தேற்றங்கள் அடங்கிய மாதிரிகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மூன்று அறிஞர்களுக்கு அனுப்பிவைத்தார். அதில் ஒருவரான ஹார்டி ராமானுஜனின் கணக்குத் தேற்றங்களைப் பார்த்தவுடன் அவற்றை அங்கீகரித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு ராமானுஜனை ஹார்டி அழைத்தார்.
அங்கு சென்ற ராமானுஜன் ராயல் சொசைட்டி மற்றும் டிரினிட்டி கல்லூரி ஆகியவற்றில் உறுப்பினரானார்.
ராமானுஜன் தனியொரு மனிதராக 3900 கடினமான கணக்குகளுக்கு விடைகளைக் கண்டுபிடித்தார். ராமானுஜனின் விடைகள் தனித்துவம் கொண்டவையாக, மரபை மீறியவையாக இருந்தன.
ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளான டிசம்பர் 22-ம் தேதியைத் தேசியக் கணக்கியல் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
1920-ம் ஆண்டில் 32-வது வயதில் நுரையீரல் பாதிப்பால் மரணமடைந்தார்.