பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வங்கிப் பணி சார்ந்த வேலைவாய்ப்புகள் தற்போது அதிகரித்துவருகின்றன. தனியார் வங்கிகள் மட்டுமின்றி அரசு பொதுத் துறை வங்கிகளும் போட்டிபோட்டு ஊழியர்களையும், அதிகாரிகளையும் தேர்வுசெய்துவருகின்றன. அரசு வங்கிகளைப் பொறுத்தவரையில் பாரத ஸ்டேட் வங்கி தவிர, மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking personnel Selection-IBPS) நடத்தும் தேர்வு மூலமாக எழுத்தர்களையும், அதிகாரிகளையும் (Probationary Officers) தேர்வுசெய்கின்றன. இதற்காக ஐபிபிஎஸ் அமைப்பானது, எழுத்தர் பணிக்கும், அதிகாரி பணிக்கும் தனித்தனியே போட்டித்தேர்வுகளை நடத்துகிறது. இந்தத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து, எழுத்தர்களையும், அதிகாரிகளையும் பொதுத்துறை வங்கிகள் தேர்வுசெய்துகொள்கின்றன.
ஆனால், நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மட்டும் ஊழியர்களையும், அதிகாரிகளையும் தானே தேர்வு நடத்தி தேர்வுசெய்துகொள்கிறது. இந்தியாவில் 15,860 கிளைகளைக் கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு 36 வெளிநாடுகளில் 190 கிளைகள் உள்ளன. இவ்வாறு இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் விரிந்து பரந்து இயங்கும் பாரத ஸ்டேட் வங்கி விரைவில் 5,400 எழுத்தர்களை (உதவியாளர்கள்) தேர்வுசெய்ய இருக்கிறது. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில், பொது அறிவு, ஆங்கிலம், கணிதம், ரீசனிங், மார்க்கெட்டிங் திறன், கணினி அறிவு ஆகிய பகுதிகளில் ஆப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் கேட்பார்கள். தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் போடுவார்கள். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் கால் மதிப்பெண் பறிபோய்விடும். எனவே, தெரியாத கேள்விக்குப் பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது. எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது 20-28. எஸ்சி., எஸ்டி, ஓபிசி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை உண்டு. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் (www.sbi.co.in) ஜூன் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்த
விரும்பினால் ஜூன் 14-ம் தேதிக்குள்ளாகவும், பாரத ஸ்டேட் வங்கி செலான் மூலமாகக் கட்ட விரும்புவோர் ஜூன் 17-ம் தேதிக்குள்ளாகவும் செலுத்திவிட வேண்டும். தேர்வுமுறை, மாநிலங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல் உள்பட அனைத்து விவரங்களையும் இந்த இணையதளத்தின் “ரெக்ரூட்மென்ட்” பகுதியில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
எழுத்தர் நிலையிலான உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ஆரம்பச் சம்பளம் ரூ.20 ஆயிரம் அளவுக்கு இருக்கும்.