1 April 2014

பேலன்ஸ் எதுக்கு? ஃப்ரீ கால் இருக்கு!

செல்போனில்  பேலன்ஸ் இல்லாதவர்கள் இலவசமாகப் பேச ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது

இப்போதெல்லாம் மாதச் செலவில் பாலுக்கு, பேப்பருக்கு என்று எடுத்துவைப்பது போல் செல்போனுக்கு என்று தனியாக பணம் எடுத்து வைக்கும் அளவுக்கு வீட்டில் இருக்கும் அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. என்னதான் கால் பூஸ்டர், மெசேஜ் பூஸ்டர் என்று போட்டாலும் 500 ரூபாய்க்கு குறையாமல் செல்போன் விழுங்கி விடும். ‘கவலையை விடுங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லோருமே இலவசமாகப் பேசலாம்’ என்கிறார்கள் பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்.

யாஷ்வாஸ் சேகர், விஜயகுமார் உமலுட்டி மற்றும் சண்டேஷ் ஈஸ்வரப்பா  என்கிற மூன்று மாணவர்களும் இணைந்து ஃப்ரீகால்(Freekall) என்கிற இலவச அழைப்புச் சேவையைக் கண்டுபிடித்து ஒரு நிறுவனமாக்கியிருக்கிறார்கள்.  இதன்மூலம் பேசுவதற்கு நம் போனில் பேலன்ஸ் தேவையில்லை. ஏற்கெனவே ஸ்கைப், வைபர், ஃபேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி இலவசமாகப் பேசலாம் என்றாலும் அதற்கு எல்லாம் இணையம் தேவை. ஆனால் ஃப்ரீகாலுக்கு இணையம் கூடத் தேவையில்லை. நமது அலைபேசியில் இருந்து 080-67683693 என்கிற எண்ணுக்கு அழைத்தால் போதும், அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு நமது அலைபேசிக்கு அழைப்பு வரும். அந்த அழைப்பை ஏற்றவுடன் நாம் பேச வேண்டிய எண்ணை பதிவு செய்யச் சொல்லி கணினியின் குரல் கேட்கும். நாம் எண்ணைப் பதிவு செய்தபின்பு பேச வேண்டிய நபருக்கு இணைப்பு கொடுக்கப்படும். இதன் செயல்முறை டிரங்க் கால் போல் இருந்தாலும் இது முழுக்க முழுக்க மேகக் கணிமை(Cloud computing) முறைப்படி இயங்குகிறது. ஜிமெயில், ஃபேஸ்புக் போல் இதற்கும் கணக்கை உருவாக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள் பன்னிரண்டு நிமிடங்கள் பேசலாம். கணக்கு இல்லாதபட்சத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசமுடியும்.

இதை முதற்கட்டமாக பெங்களூருவில் சோதனை செய்து பார்த்தபோது மிக அதிக அழைப்புகள் வந்ததால் ஃப்ரீகாலின் சர்வர் ஏழு முறை பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது அதிகத் திறன் உள்ள சர்வர் பொருத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுமைக்கும் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் என்றும், ஒரே நாளில் இந்தியா முழுக்க ஒரு கோடி அழைப்புகள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஃப்ரீகால் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்கவில்லையே தவிர, வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது. அதாவது நீங்கள் டயல் செய்யும் போது ரிங்கிற்கு பதிலாக விளம்பரங்கள் ஓடும். அதே போல் பேசும் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு நடுவே விளம்பரம் ஒலிபரப்பப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நூற்றி எண்பது கோடி வரை வருமானம் பெறமுடியுமாம். இந்தியா மட்டுமில்லாமல் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் ஃப்ரீகாலுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று ஃப்ரீகால் நினைக்கிறது. அதனால் ஆரம்பிக்கும் போதே உலகம் முழுக்க ஆரம்பிக்கலாமா என்று ஃப்ரீகால் யோசித்து வருகிறது.  ஃப்ரீகால் கணக்கை  http://www.freekall.in/ என்கிற இணையதளத்தில் சென்று பதிவுசெய்து கொள்ளலாம். https://www.facebook.com/freekall  என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்களது செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்.