9 December 2013

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை சி.டி.யாக என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு அண்ணாபல்கலைக்கழகம் தீவிரம்

சென்னை
ஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ எடுத்து அதை சி.டி.யாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.
மாணவர்களுக்கு புதிய திட்டம்
தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக்கழக கட்டுப்பாட்டில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 600 உள்ளன. இந்த கல்லூரிகளில் சில கல்லூரிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தந்த துறையில் நிபுணர்கள் இல்லை. எனவே அண்ணாபல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் மேம்பாட்டு துறை துணைவேந்தர் பேராசிரியர் ராஜாராம் உத்தரவுப்படி ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தஉள்ளது.
அதாவது இந்தியா ழுழுவதும் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதுபோல தனியாக வீடியோ மற்றும் ஆடியோ தயாரித்து என்.டி.பி.இ.எல். நிறுவனம் வழங்கி உள்ளது.
சி.டி.வடிவில்.............
அது பொதுவாக உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்ப அதில் தேவையானதை மட்டும் பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களுக்கு மட்டும் அனைத்து செமஸ்டர்களுக்கும் தேவையான பாடங்களில் ஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ மற்றும் ஆடியோ பதிவுசெய்து சி.டி.தயாரித்து வருகிறது. இந்த சி.டி. வருகிற மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும். பின்னர் அவை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவற்றை அந்த கல்லூரிகள் மாணவர்களுக்கு காப்பி எடுத்து கொடுக்கும்.
இணையதளம் தேவையில்லை
இந்த சி.டி.யில் உள்ளவற்றை சாதாரண கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக்கொண்டு மாணவர்கள் படிக்கலாம். இணையதள வசதி தேவையில்லை. இதனால் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது புரியாவிட்டாலும் இந்த சி.டி.யில் உள்ளதை அடிக்கடி போட்டு பார்த்து படித்தால் நன்றாக விளங்கும். புரியாததும் புரியும்.
கல்லூரிக்கு போகாத நாட்களிலும் கல்லூரிக்கு போகவில்லையே என்ற கவலை வேண்டாம். எனவே இந்த சி.டி. மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதற்கான ஏற்பாடுகளை அண்ணாபல்கலைக்கழக ஆசிரியர் மேம்பாட்டு துறை இயக்குனர் மோகன், கூடுதல் இயக்குனர் ஸ்ரீதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Thanks to : Daily Thanthi Tamil News