கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி
பொறியியல் பட்டப் படிப்பில் மெக்கானிக் கல், ஆர்க்கிடெக் பாடப் பிரிவுகள் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகின்றன. மெக்கானிக்கலில் ஆட்டோ மொபைல், மேனுபேக்சரிங் பாடப் பிரிவுகள் பெண்களுக்கு பொருத்தமானது. தற்போது மெக்கானிக்கல் துறையில் 8 % பெண்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். மெக்கானிக்கல் பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் ஆண், பெண் சரிவிகித அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே மத்திய அரசு, உலக வங்கி மற்றும் இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்டு ஆகியவை, திட்டத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்கின்றன. எனவே, மெக்கானிக்கல் முடித்த பெண்களை நிறுவனங்கள் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
இதிலும் பட்டப் படிப்புடன் நிறுத்தாமல் புராடக்ட் டிசைனிங், ஆட்டோமேட்டிவ் டிசைனிங், வெல்டிங் இன்ஜினியரிங், பைப்பிங் இன்ஜினியரிங், எனர்ஜி இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர் படிப்புகளை படிப்பது எதிர்காலத்தை வளமாக்கும்.
கற்பனை வளம் மிக்கவர்களுக்கு ஆர்க்கிடெக்சர் ஏற்றது. சுய வேலைவாய்ப்புக்கும் கைகொடுக்கும். ஐந்தாண்டு படிப்பான இதைப் படிக்க விரும்புவோர் முன்னதாக National aptitude test for architecture நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அதில் 200-க்கு குறைந்தது 80 மதிப்பெண் பெற வேண்டும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஆன்-லைன் தேர்வு நடக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம்.
ஆனால், இதில் ஏற்கனவே எடுத்த மதிப்பெண் மற்றும் தற்போது எடுத்த மதிப்பெண்ணின் கூட்டு சராசரியை மதிப்பெண்ணாக வழங்குவர். உதாரணத்துக்கு முதலில் எழுதி 70 மதிப்பெண் பெற்று, அடுத்தத் தேர்வில் 80 மதிப்பெண் பெற்றால் கூட்டு சராசரி மதிப்பெண்ணாக 75 வழங்கப்படும். இப்பாடப் பிரிவுக்கு தமிழகத்தில் தனி கவுன்சலிங்தான். தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பொறியியல் பாடப் பிரிவுக்களுக்கான கவுன்சலிங்கில் இது இடம் பெறாது.
இதற்கான கட் ஆஃப் 400. ஆர்க்கிடெக்சர் பாடப் பிரிவுக்கான பாடத்தில் 200 மதிப்பெண்களும், நுழைவுத் தேர்வில் 200 மதிப்பெண்களும் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தப்படும். சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள், மாஸ்டர் ஆஃப் ஆர்க்கிடெக்சர், மாஸ்டர் ஆஃப் டவுன் பிளானிங், இன்டீரியர் டிசைன், லேண்ட் ஸ்கேப்பிங் உள்ளிட்ட மேற்படிப்புகளை படிக்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போலவே ஐ.இ.எஸ். (Indian Engineering service) தேர்வும் உண்டு. அதை எழுதி அரசாங்கத்தில் உயர் பதவியும் பெறலாம்.