பொறியியல் படிப்பில் ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள் ரிசர்ச் ஓரியன்டட் இன்ஜினியரிங் பிரிவுகளில் ஆராய்ச்சி பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கலாம். பயோ-டெக்னாலஜி படிப்பவர்கள், நான்கு ஆண்டு கல்லூரி படிப்புடன் நிறுத்திக் கொள்ளாமல், பி.எச்டி. முடித்தால் சிறந்த எதிர்காலம் உள்ளது.
பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்தவர்கள் மட்டுமல்லாமல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களும் பயோ-டெக்னாலஜி பட்டப் படிப்பை படிக்கலாம். இதற்கு நம் நாட்டைவிட அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
மருத்துவம் கிடைக்காததால் பயோ-டெக்னாலஜி எடுத்துப் படிப்பது என்பது தவறான கண்ணோட்டம். ஆராய்ச்சிப் படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இப்பாடப் பிரிவை தேர்வு செய்யலாம். பயோ-டெக்னாலஜி படித்தவர்களில் 50 சதவீதத்தினர் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்றனர். பயோ-டெக்னாலஜி படித்தவர்கள், எம்.பி.ஏ. பாடப் பிரிவை தேர்வு செய்யலாம். மேற்படிப்பு பாடங்களான ஜெனடிக் இன்ஜினியரிங், டிஷ்யூ இன்ஜினியரிங் போன்றவற்றை தேர்வு செய்து, பி.எச்டி. முடிப்பவர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு உள்ளது.
வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை செலவாகும். இந்தியாவில் பட்டமேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள், ‘கேட்’ தேர்வு எழுத தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ‘கேட்’ தேர்வில், தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழக மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பயோ-டெக்னாலஜி படிக்க அனைத்து வசதிகளும் உள்ளன.
பயோ-மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புக்கு சர்வதேச மருத்துவத் துறையில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. சமீபகாலமாக மிகத் துல்லியமாக நோய் பாதிப்பைக் கண்டறியும் ஸ்கேனிங் கருவிகள் வந்துவிட்டன.
புதிய நோய்களைக் கண்டறிய நுண்ணிய கருவிகளும், உபகரணங்களும் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால், மருத்துவத் துறையில் பயோ-மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது.
இதில் பட்டமேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் மெடிக்கல் எலக்ட்ரானிக்கல்ஸ், இன்ஸ்ட்ருமென்ட் அண்டு கன்ட்ரோல் டெக்னாலஜி படிப்புகளை எடுத்துப் படிப்பதன் மூலம் மருத்துவத் துறையில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியும். மேலும் பயோ-மெடிக்கல் முடித்தவர்களுடன் இணைந்து ஸ்கேன் சென்டர், பரிசோதனைக் கூடங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பும் பெறலாம்.