27 December 2013

அணு ஆராய்ச்சி மையத்தில் பிஎச்டி: மாதம் ரூ.16 ஆயிரம் உதவித் தொகை!

பொன். தனசேகரன்

கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பிஎச்டி ஆய்வை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.

ல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பிஎச்டி படிக்க பதிவு செய்யலாம். அத்துடன், ஆய்வுக் காலத்தில் உதவித் தொகையும் கிடைக்கும். இந்த ஃபெல்லோஷிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கெமிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், என்ஜினியரிங் சயின்சஸ் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். 80 மாணவர்களுக்கு இந்த ஃபெல்லோஷிப் வழங்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது.

இந்த ஃபெல்லோஷிப்பை யார் பெறலாம்?

விண்ணப்பதாரர் இந்தியப் பிரஜையாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 1.7.2013 நிலவரப்படி, 28 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் ஓபிசி மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகளும் விலக்கு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும்.  

இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெட்டலர்ஜி, மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அட்மாஸ்பெரிக் சயின்ஸ், நியூக்ளியர் என்ஜினீயரிங், நியூக்ளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 எம்எஸ்சி, எம்எல்ஐஎஸ் படிப்புகளில் குறைந்தது  60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்சி நிலையில் கணிதம் அல்லது நியூமரிக்கல் மெத்தட்ஸ் எம்எஸ்சியில் ஒரு பாடமாகக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பிஎஸ்சி நிலையில் வேதியியலை துணைப் பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
வேதியியலில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்தவர்கள் பிஎஸ்சி பட்ட நிலையில் இயற்பியலையும் கணிதத்தையும் துணைப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும்.

வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி அல்லது பி.இ., பிடெக் படித்தவர்கள் இன்பர்மேஷன் சயின்சில் முதுநிலைப் பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங், மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அட்மாஸ்பெரிக் சயின்ஸ், நியூக்ளியர் என்ஜினீயரிங், நியூக்ளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பிஇ., பிடெக்., பிஎஸ்சி என்ஜினீயரிங், பி.எஸ்சி., டெக், எம்.டெக். படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

மாணவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
சென்னை, கொல்கத்தா, புவனேஸ்வரம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். யுஜிசி - சிஎஸ்ஐஆர்-நெட் தேர்வில் தகுதி மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்களும் ஜெஸ்ட் (JEST 2013) தேர்வில் 90 பர்சென்டைல் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளவர்களுக்கும் இந்த எழுத்துத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். எம்இ, எம்டெக் படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், கேட் தேர்வில் 90 சதவீத பர்சென்டைலுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களும் இந்த எழுத்துத் தேர்வை எழுத வேண்டியதில்லை. எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து தகுதியுடைய மாணவர்களுக்கு கல்பாக்கத்தில் நேர்முகத் தேர்வு  ஜனவரி 20-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இணைய தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தையும் ஹால் டிக்கெட்டையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் ஹால் டிக்கெட் படிவத்தையும் உரிய இணைப்புகளுடன் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் ஆட்கள் தேர்வு பிரிவு உதவி நிர்வாக அதிகாரி முகவரிக்கு டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஃபெல்லோஷிப் பெற தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தபால் மூலமும் தெரிவிக்கப்படும்.

இந்த ஃபெல்லோஷிப் பெற தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாணவர்களின் திறமை, செயல்பாடுகளைப் பொருத்து ஒவ்வொரு ஆண்டும் உதவித் தொகை வழங்குவது நீட்டிக்கப்படும். மூன்றாம் ஆண்டிலிருந்து இந்த உதவித் தொகை பெறுபவர்களுக்கு சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் வழங்கப்படும். அதாவது மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த ஃபெல்லோஷிப் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த உதவித் தொகை தவிர, ஆராய்ச்சி தொடர்பான இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அத்துடன் சலுகை கட்டணத்தில் தங்கும் விடுதி உள்ளிட்ட சலுகைகளும் உண்டு.

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுப் பணியில் ஆர்வமிக்க மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்குhttp://www.igcar.ernet.in