Pages
▼
Resource
▼
4 February 2014
மெக்கானிக்கல் மேற்படிப்புக்கு சிறப்பான எதிர்காலம்
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி
கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களுக்கு இணையாக சம்பளம் பெறமுடிவதில்லை’ என்பது மெக்கானிக்கல் இன்ஜினீயர்களின் பொதுவான புகார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் திட்டமிட்டு மேற்படிப்பு படித்தால் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களைவிட அதிகம் சம்பாதிக்கலாம்.
மெக்கானிக்கல் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும்போதே, கேட்-காம் (CAD-CAM), பி.ஆர்.ஓ.இ.(PROE) மற்றும் CMC மிஷினிங் உள்ளிட்ட 6 மாத, ஓராண்டு படிப்புகளை படித்து வைத்துக் கொள்வதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர் எம்.இ. பவர் எனர்ஜி அல்லது தெர்மல் எனர்ஜி தேர்வு செய்யலாம். தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே இருக்கும் எம்.இ. ஹை வோல்டேஜ் இன்ஜினீயரிங் படிக்கலாம்.
திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் வெல்டிங் இன்ஜினீயரிங், டிசைன் அண்ட் ப்ரொடக் ஷன் ஆஃப் தெர்மல் பவர் எக்யூப்மென்ட் படிப்புகள் உள்ளன. எம்.டெக். பட்ட மேற்படிப்பில் இண்டஸ்ட்ரியல் அண்ட் சேஃப்டி இன்ஜினீயரிங், ப்ரொடக் ஷன் , மேனுஃபேக்
சரிங் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. தவிர, எம்.டெக். ரோபாடிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் படிப்புகள் அநேக கல்லூரிகளில் உள்ளன. மும்பை ஐ.ஐ.டி.யில் 6 மாதம் மற்றும் ஓராண்டு படிப்பான பைப்பிங் இன்ஜினீயரிங் உள்ளது. சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டூல் டிசைன் கல்வி நிறுவனத்தில் எந்திர உபகரணங்கள் வடிவமைப்பு குறித்து குறைந்த கால வகுப்புகள் நடத்துகின்றனர்.
திருச்சி பெல் நிறுவனத்தினர் திறமை மிக்க பொறியாளர்களை நுழைவுத் தேர்வு மூலம் பணிக்கு எடுத்து, தங்களுக்கு தேவையான 6 மாத படிப்புகளையும் வழங்குகின்றனர். இதுகுறித்து பத்திரிக்கைகளில் பெல் நிறுவன விளம்பரம் வரும்போது, பொறியியல் மாணவர்கள் விண்ணப்பித்து,வேலைவாய்ப்புடன் படிப்பும் பெறலாம்.
பி.இ. முடித்ததும் எம்.பி.ஏ. படிக்க விரும்புவோர் எம்.பி.ஏ. இன் எனர்ஜி மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. இன் பவர் பிளான்ட் மேனேஜ்மென்ட் படிக்கலாம். இவை நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ளன. தமிழகத்தில் நெய்வேலி உள்பட இந்தியாவில் 9 இடங்களில் இக்கல்வி நிறுவனம் உள்ளது. ஓராண்டு படிப்பான பி.ஜி. இன் தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீயரிங் படிப்பதன் மூலமும் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம்.
இந்திய அளவில் உள்ள கல்லூரிகளில் சேர GATE தேர்வும், தமிழக அளவில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் சேர TANCET தேர்வும் எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு மார்ச் மாதம் விண்ணப்பம் அளிக்கப்படும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்வு நடக்கும். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் உயர்கல்வி வரை படித்தவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எனவே, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டப் படிப்புடன் மேற்கண்ட மேற்படிப்புகளையும் படிப்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக சம்பளத்தில் உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா?
நீங்கள் ஐ.டி.ஐ. படித்தவரா? இந்திய ரயில்வேயில் வேலை செய்ய உங்களுக்கு ஆசை இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தச் செய்தி. இந்திய ரயில்வேயில் 26,567 காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 1,666 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலிப் பணியிடங்கள்
மொத்தம் உள்ள காலிப் பணியிடங்களில் பொதுப் பிரிவினருக்கு 13,464 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 6,521 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 4,122 இடங்களும், பழங்குடியினருக்கு (எஸ்.டி.) 2,460 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2014 தேதி அன்று 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.
இதர விவரங்கள்
பணி : அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) மற்றும் டெக்னீசியன்.
சம்பளம் : ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்ட் டி.வி. மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறனறித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 17.02.2014 மாலை 5.30 மணி.
தேர்வு நாள் : 15.06.2014
விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை www.rrbchennai.gov.in, www.rrbbnc.gov.in, www.rrbthiruvananthapuram.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பட்டமேற்படிப்பால் சாதிக்கலாம்
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி
வாழ்க்கையில் சாதிக்க கூடிய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் பிரிவில் பல்வேறு பட்ட மேற்படிப்புகள் உள்ளன. இப் படிப்புக்கு குறைந்த அளவு வேலைவாய்ப்பே உள்ளது என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பல்வேறு துறைகளில் இப் படிப்புக்கு சிறந்த எதிர்காலம் நிறைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. மற்றும் எம்.டெக். பட்ட மேற்படிப்புகளில் ஹை- வோல்டேஜ் இன்ஜினீயரிங், எனர்ஜி இன்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. ரினிவபல் எனர்ஜி இன்ஜினீயரிங், நியூக்லியர் இன்ஜினீயரிங் பட்ட மேற்படிப்புகளை சாஸ்தா, எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. பாபா அகாடமி ரிசர்ச் சென்டர் ஓராண்டு பட்டமேற்படிப்பாக நியூக்லியர் இன்ஜினீயரிங் படிப்பை அளிக்கிறது.
எம்.இ. மற்றும் எம்.டெக். பட்ட மேற்படிப்புகளில் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகள் உள்ளன. அதில், பவர் எலக்ட்ரானிக் அண்ட் டிரைவ்ஸ், பவர் சிஸ்டம்ஸ் எலக்ட்ரிக்கல் மிஷின்ஸ் அப்ளைடு தி எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை எடுத்து படிப்பதன் மூலம் பணி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
நேஷனல் பவர் பிளான்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு குறைந்தபட்ச பட்ட மேற்படிப்புகள் வழங்குகின்றன. எலக்ட்ரிக்கல் பில்டிங் சர்வீசஸ் படிப்பு சுய வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்பாக உள்ளது.
வீடு, கடை, நிறுவனங்களில் மின்சாதனப் பொருட்களின் உபயோகம் அதிக அளவு உள்ளது. எனவே, எலக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேஷன் இன் பில்டிங் அண்டு அவுட்டோர் படிப்பு உடனடி வேலைவாய்ப்பை அளிக்கிறது. பி.ஜி. புரோகிராம் டிப்ளேமோ இன் எனர்ஜி எஃபிசியன்ஸி, எனர்ஜி ஆடிட் அண்ட் மேனேஜ்மென்ட் படிப்புகள், சி.இ.இ.எஸ். சர்ட்டிபிகேட் கோர்ஸுக்கு தகுதியானது. இப் படிப்பின் மூலம் எனர்ஜி எக்ஸ்பர்ட்டாகவும், எனர்ஜி கன்சல்டன்ட், எனர்ஜி ஆடிட்டர், எனர்ஜி மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் செல்ல இயலும். நியூக்லியர் எனர்ஜி இன்ஜினீயரிங்குக்கு அதிக அளவு தேவை உள்ளது. குஜராத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் நியூக்லியர் இன்ஜினீயரிங், தீனதயாள் பண்டிட் பெட்ரோலியம் யுனிவர்சிட்டி மூலம் நியூக்லியர் எனர்ஜி பட்ட மேற்படிப்பை வழங்குகிறது. எனர்ஜி பவர் செக்டாரில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெறுவதன் மூலம் எனர்ஜி ஆடிட்டர் கோர்ஸ் எடுக்க முடியும்.
பொறியியல் பட்டப் படிப்பு முடித்த பிறகு ஆட்டோமோடிவ் எலக்ட்ரிக்கல்- எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் பகுதிநேரமாக படிக்கலாம். பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடியில் இப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சோலார் எனர்ஜி பணிக்கான தேவை அதிக அளவு உள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் சேர்வதிலும், சுயதொழில் செய்வதிலும் வாய்ப்பு உள்ளது. குஜராத் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோலார் எனர்ஜி கல்வி நிறுவனத்தில் இதற்கான பட்ட மேற்படிப்புகளை அளிக்கின்றனர். இதில் அட்வான்ஸ் சர்ட்டிபிகேட் இன் சோலார் எனர்ஜி 6 மாத பட்ட மேற்படிப்பு உள்ளது. எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பிலும் பவர் மேனேஜ்மென்ட் எடுத்து படிப்பதால், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.